5 ஜ_லை 2020 திகதியில் கிடைத்த தரவுகளின்படி வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 100,000 கோவிட் 19 நோயாளர்களைக் கொண்ட கட்டார் அதிகளவு நோயாளர்களைக் கொண்ட இரண்டாவது நாடாகக் காணப்படுகின்றது.  மொத்த சனத்தொகையில் எத்தனை வீதமானோருக்கு இந்நோய் காணப்படுகின்றது எனப்பார்க்கையில் இதுவே உலகத்தில் அதிகமான வீதமாகும்.  கட்டார் அரசாங்கத்தினால் மிக விரிவான வகையில் மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பரிசோதனை நாட்டில் இறப்பு வீதத்தினை 0.1 வீதத்திற்கும் கீழாகக் குறைக்க உதவியபோதும் அதிக எண்ணிக்கையான கோவிட் 19 நோயாளர்களுடன் சிக்கித்தவிக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில்  கட்டாரின் பொருளாதாரமானது இக்கொள்ளை நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2020 இல் கட்டார் பொருளாதாரமானது 4.3 வீதத்தினால் சுருக்கமடைந்து மத்திய கிழக்கிலேயே மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பொருளாதாரமாக மாறும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறுகின்றது.

கட்டாரில் கோவிட் 19 இன் பரவலும் கொள்ளை நோயின் தாக்கத்தினால் அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் இலங்கை மீது கணிசமான நிதியியல் ரீதியான தாக்கங்களை கொண்டுள்ளது. 2010-2017 காலப்பகுதியில் அண்ணளவுச் சராசரியாக 64,000 இலங்கையர்கள் கட்டாருக்குச் சென்றதன் மூலம் அண்மைக்காலங்களில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மூன்று நாடுகளில் கட்டாரும் ஒன்றாகக் காணப்படுகின்றது. கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தரவுகளின்படி, 2018 வரையிலும், கிட்டத்தட்ட 140,000 இலங்கையர்கள் கட்டாரில் வசித்துள்ளனர். 2017 இல் 508.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியதன் மூலம் சிறிய வளைகுடா நாடாகிய கட்டார் இலங்கையர்கள் அதிகமாக வெளிநாட்டுப் பணங்களை அதிகளவில் அனுப்பும் முக்கிய ஐந்து நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. ஆகவே, கட்டார் மீதான கோவிட் 19 இன் தாக்கமானது கட்டாரிலுள்ள இலங்கையர்கள் மீது மட்டுமன்றி இலங்கையிலுள்ள அவர்களின் குடும்பங்களின் மீதும் இலங்கைப் பொருளாதாரத்தின் மீதும் நேரடியான தாக்கத்தினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையானது இப்பொருளாதாரத் தாக்கங்கள் பற்றி ஆராய முற்படுகின்றது.

இக்கட்டுரையானது 3-15 ஜ_ன், 2020 காலப்பதியில் மேற்கொள்ளப்ட்ட விரைவு நிகழ்நிலைக் கருத்தாய்வினை அடிப்படையாகக் கொண்டது.1 இவ்வாய்வின் மாதிரியானது தற்போது கட்டாரில் வாழும் 101 இலங்கையர்களை உள்ளடக்கியுள்ளது. இம்மாதிரியில்  78 உயர் நுட்பத்தேர்ச்சியுடையவர்கள், 09 நுட்பத்தேர்ச்சியுடையவர்கள் மற்றும் 14 அரை நுட்பத்தேர்ச்சியுடையவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.2  தகவல் வழங்கியவர்களில் 82 வீதமானோர் ஆண்கள், 18 வீதமானோர் பெண்கள் மற்றும் தகவல் வழங்கயிவர்களின் சராசரி வயது 36 ஆகும். தகவல் வழங்கியவர்களில் பெரும்பாலானோர் திருமணம்  செய்துள்ளதுடன் 57.4 வீதமானோர் குடும்பங்களுடன் கட்டாரில் வாழ்வதுடன் 30.7 வீதமானோரின் குடும்பங்கள் இலங்கையில் வாழ்கின்றனர். ஏனையோர் ஒன்றில் திருமாகாதவர்களாக, விவாகரத்து பெற்றவர்களாக அல்லது குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் தற்போது எதிர்நோக்கும் நிதிப்பிரச்சினைகள்

தகவல் வழங்கியவர்களில் எண்பத்தேழு வீதமானோர் ( N=97) கோவிட் 19 காரணமாக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிதியில் பிரச்சினைகளை தற்போது எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டனர் (உரு 1). அவர்கள் குறிப்பிட்ட பிரதான பிரச்சினை சம்பளக் குறைப்பாகும். கிட்டத்தட்ட 50 வீதமானவர்கள் கடந்த சில மாதங்களில் தங்கள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக சேமிப்பு இழப்பு (24.7%), கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ( 20.6%), சம்பளம் கிடைப்பதில் தாமதம் (19.6%), இலங்கைக்கு பணம் அனுப்புவதில் சிரமம் (16.5%), வாடகை செலுத்துவதில் சிரமம் (12.4%), தொழில் இழப்பு (9.3%), ஊக்க ஊதிய (bonuses) இழப்பு (9.3%), உணவுச் செலவு மற்றும் ஏனைய செலவுகளைச் செய்வதில் சிரமம் (9.3%), மற்றும் பணிக்கொடை (gratuity) இழப்பு (2.1%), என்பன காணப்படுகின்றன.

அனைத்து வகையான நுட்பத்தேர்ச்சியுடைய  தொழிலாளர்கள் எதிர்நோக்கும் கடின நிலைமைகளைப் பொறுத்தவரையில் நிதிப்பிரச்சினைகளின் அளவு மற்றும் வகை என்பன தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. 39 வீதமான உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் கொள்ளைநோயின் காரணமாக தாம் இதுவரையிலும் எவ்வித நிதி இடர்பாடுகளையும் எதிர்நோக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளனர். 11 வீதமான நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களும் 14 வீதமான அரைநுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களும் மட்டுமே தாம் இன்னும் கொள்ளை நோயினால் எவ்வித நிதிப்பிரச்சினைகளையும் எதிர்நோக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர் ( உரு 2).

கொள்ளைநோயினால் ஏற்பட்ட தற்போதைய பொருளாதார நிலைமையின் காரணமாக அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்களே இலங்கைக்கு பணம் அனுப்புவது, அவர்களின் கடன்களை மீளச்செலுத்துவது, அவர்களின் உணவு மற்றும் ஏனைய செலவுகளை முகாமை செய்வது போன்ற பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். உயர்நுட்பத்தேர்சியுடைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அதிக வீதத்திலான நுட்பத்தேர்சியுடைய மற்றும் அரை நுட்பத்தேர்ச்சியுடைய கட்டாரிலுள்ள இலங்கையர்களே கொள்ளைநோயின் காரணமாக  சம்பள குறைப்புக்கள், தொழில் இழப்பு, ஊக்க ஊதிய இழப்பு, மற்றும் சேமிப்பு இழப்பு போன்றவற்றினை  எதிர்நோக்கியுள்ளனர்.  மறுபக்கத்தில் நுட்பத்தேர்ச்சியுடைய மற்றும் அரை நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களை விடவும் கட்டாரிலுள்ள உயர்நுட்பத்தேர்ச்சியுடைய இலங்கையர்களே அதிக வீதத்தில் பணிக்கொடை இழப்பு மற்றும் வாடகை செலுத்துவதில் இடர்பாடுகள் என்பவற்றினை எதிர்நோக்கியுள்ளனர்.

அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்கள் இலங்கைக்கு பண அனுப்புதல்களில் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.  இதற்கான காரணம் யாதெனில் கோவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக கட்டார் அரசாங்கம் மேற் கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தனிநபர் ஊடாக பணம் ஆனுப்பும் நடவடிக்கைகளும் பணப்பரிமாற்றம் செய்யும் அலுவலகங்களும் 26 மார்ச் -11 மே, 2020 காலப்குதியில் மூடப்பட்டமையாகும்.  இது நுட்பத்தேர்ச்சியுடைய மற்றும் உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களைப் போலன்றி பணம் அனுப்புவது சம்மந்தமான தொழிநுட்பம் மற்றும் நிகழ்நிலை (online) முறைகள் பற்றிய அறிவினைக் குறைவாகக் கொண்ட  அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்களுக்கு இன்னல்களை உருவாக்கியது.

கட்டாரிலுள்ள உயர்நுட்பத்தேர்ச்சியுடைய மற்றும் நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அதிகளவில் அவதியுறுகின்றனர்.  பொதுவாக, உயர்நுட்பத்தேர்ச்சியுடைய மற்றும் நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களை விடவும்  அதிக வீதத்திலான  அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்கள் தாம் புலம் பெயர்வதற்கும்  பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒரே நோக்கிலும் கடன் பட்டுள்ளனர்.  மேலும், அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்கள் கட்டாரில் தாம்  ஆரம்ப மாதங்களில் உழைத்த தொகையினை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே செலவிட்டுள்ளனர். இது அவர்களின் உழைப்பில் ஒரு கணிசமான தொகையாகும்.  ஆகவே, சிறிய அளவிலான சம்பளக் குறைப்பு அல்லது ஊக்க ஊதிய இழப்புக் கூட அவர்களை கடன் சுழலில் தள்ளுவதுடன் கட்டாரில் வாழ்க்கைச் செலவைக்கூடச் சமாளிக்க முடியாத கடின நிலைமையை அவர்களுக்கு உருவாக்கும்.

மறுபக்கத்தில், கட்டாரில் நுட்பத்தேர்ச்சியுடைய  மற்றும் அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்களை விடவும் அதி கூடிய வீதமான உயர்நுட்பத்தேர்ச்சியுடைய இலங்கையர்கள் பணிக்கொடை இழப்புக்களையும் வாடகையினைச் செலுத்துவதில் இன்னல்களையும் எதிர்நோக்கியுள்ளனர். உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் அதிகரித்த வீதத்தில்  பணிக்கொடை இழப்புக்களை எதிர்நோக்கியமைக்கான காரணம்  பணப்புழக்கப் பிரச்சினைகளை  எதிர்நோக்கிய கம்பனிகள் உயர்நுட்பத்தேர்ச்சியுடைய  தொழிலாளர்களுக்கு ஊக்க ஊதியக் கொடுப்பனவுகளை தாமதித்தமை அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தியமைக்கான காரணம் உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊக்கிய ஊதியக் கொடுப்பனவுத்தொகை நுட்பத்தேர்ச்சியுடைய,  மற்றும் அரைநுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களுக்குவழங்க வேண்டிய ஊக்கிய ஊதியக் கொடுப்பனவுத்தொகை மிகவும் அதிகமாகக் காணப்பட்டமையாகும்.

உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் எதிர்நோக்கிய வாடகை தொடர்பான பிரச்சினைகள் உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் வசித்த தங்குமிட வாடகை உடன்படிக்கைகளின் தன்மையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். வழமையாக, கட்டாரில் உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் ஒப்பந்தக்கட்டுப்பாடுகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிப்பதுடன் சம்பளக் குறைப்பு மற்றும்  சம்பளக் கொடுப்பனவுத் தாமதம் என்பவற்றுக்கு மத்தியிலும் குறுகியகால அறிவித்ததலுடன் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல முயாதவர்களாகவும் உள்ளனர். நுட்பத்தேர்ச்சியுடைய மற்றும் குறைந்த நுட்பத்தேர்ச்சியுடைய  தொழிலாளர்களுக்கு கம்பனிகள் வழமையாக தங்குமிட வசதிகளை வழங்குகின்றன அல்லது இலகுவாக வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய நெகிழ்வுத்தன்மையுடைய இடங்களில் வசிப்பதால் அவர்கள் உயர்நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் எதிர்நோக்கியது போல வாடகை தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கவில்லை.

எதிர்வரும் மாதங்களில் கட்டாரிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் நிதிதொடர்பான பிரச்சினைகள்

கொள்ளைநோயினால் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக வரப்போகும் மாதங்களில் தமது நிதிநிலைமைகள் மோசமடையக்கூடும் என கட்டாரிலுள்ளஇலங்கைத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர் (உரு 3) தற்போது நிதிப்பிரச்சினைகளை எதிர்நோக்கும் 67 வீதமான தகவலாளருக்கு மாற்றான வகையில் 93 வீதமான தகவலாளர்கள் கொள்ளை நோயின் காரணமாக வரப்போகும் நாட்களில் நிதிப்பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என நம்புகின்றனர். தற்போதைய நிலைமையுடன் தொடர்புபட்டவகையில், வரப்போகும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பெரும்பாலும் பொதுவான நிதிப்பிரச்சினையாக சம்பளக்குறைப்பு காணப்படுகின்றது. 54 வீதமான தகவலாளர்கள்  வரப்போகும் மாதங்களில் தமது சம்பளங்களில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கின்றனர். தற்போதைய நிதிக்கஸ்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் நிதிக்கஸ்டங்களுக்கும் இடையிலான  மிகவும் முக்கிய குறிப்பிடத்தக்க வேறுபாடு யாதெனில் பணிக்கொடை கொடுப்பனவுகளின் இழப்பாகும். ஏனெனில், 22 வீதமான தகவலாளர்கள் வரப்போகும் மாதங்களில் தாம் பணிக்கொடை கொடுப்பனவுகளை இழக்கக்கூடும் என நம்பும்போது 2 வீதமான தகவலாளர்கள் தாம் ஏற்கனவே பணிக்கொடை கொடுப்பனவுகளை இழந்துவிட்டதாகக் நம்புகின்றனர். இதற்கு அடுத்ததாக  42 வீதமான தகவலாளர்கள் வரப்போகும் மாதங்களில் தாம் தொழில்களை இழக்கக்கூடும் என நம்பும்போது 9 வீதமான தகவலாளர்கள் தாம் ஏற்கனவே தொழிலை இழந்துவிட்டதாகக் நம்புகின்றனர். எதிர்வரும் காலங்களில் சம்பளக் குறைப்பிற்கு அடுத்ததாக பணிநீக்கத்தினால் உருவாகப்போகும் பிரச்சினையே அடுத்த பொதுவான நிதிப்பிர்சினையாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக வீதத்தினால் ஏற்படப்போகும்  ஊக்க ஊதிய இழப்புக்கள் மற்றும் சம்பளம் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் என்பவற்றினால் ஏற்படப்போகும் நிதிப்பிரச்சினைகள் மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடனைத் திருப்பிச் செலுத்துதல், இலங்கைக்கு பணம் அனுப்புதல், உணவு மற்றும் ஏனைய செலவுகளைச் சமாளித்தல் என்பவற்றில் ஏற்பட்டுள்ள  கஸ்ட நிலைமைகளால் ஏற்படப்போகும் நிதிப்பிரச்சினைகளும் குறைந்தளவில் காணப்பட்ட போதும் மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலே கலந்துரையாடப்பட்டது போல,  சம்பள வெட்டுக்களே கட்டாரிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் தற்போதும் வரப்போகும் மாதங்களிலும்  எதிர்நோக்கும் பொதுவான நிதிப்பிரச்சினையாகும். தற்போது சம்பள வெட்டினை அனுபவிக்கும் அல்லது வரப்போகும் மாதங்களில் சம்பள வெட்டினை எதிர்நோக்கும் தகவலாளர்களில் (N=63), 50 வீதமானோர் சம்பள வெட்டு 11%-30% எனக்குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை தற்போது சம்பள வெட்டினை எதிர்நோக்கிய போதும் அல்லது வரப்போகும் மாதங்களில் சம்பளத்தில் ஒரு வீழ்ச்சியினை எதிர்பார்த்த போதும் ஐந்தில் ஒரு பங்கினருக்கு சம்பள வெட்டின் வீதம் சரியாகத் தெரியவில்லை (உரு 4). ஒன்பது வீதமானோர் 10 வீத சம்பள வெட்டினை அனுபவிக்கின்றனர் அல்லது எதிர்பார்க்கின்றனர். அதேவேளை மற்றுமொரு ஒன்பது வீதத்தினர் 41%-50%  சம்பள வெட்டினை அனுபவிக்கின்றனர் அல்லது எதிர்பார்க்கின்றனர். தகவலாளர்களில் கிட்டத்தட்ட எட்டு வீதமானோர் 31%-40%   சம்பள அனுபவிக்கின்றனர் அல்லது எதிர்பார்க்கின்றனர்.  ஐந்து வீதத்தினர் மட்டுமே 50 வீதத்திற்கும் அதிகமான சம்பள வெட்டினை எதிர்நோக்குகின்றனர்  அல்லது எதிர்பார்க்கின்றனர்.

தற்போது சம்பள வெட்டினை எதிர்நோக்கும் அல்லது வரப்போகும் மாதங்களில் சம்பள வெட்டினை எதிர்நோக்கப்போகும் மூன்று வீதத்தினர் மட்டுமே குறைக்கப்பட்ட தமது சம்பளத்தினை தமது தொழில் வழங்குனர்கள் திருப்பித் தருவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.  பெரும்பான்மையினர் (52 %) நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமது சம்பளம் திரும்பத் தரப்படும் என நம்பவில்லை.  45 வீத்தினர் தமது கம்பனிகள் கொள்ளை நோய்க்குப் பின்னர் வழமைக்குத் திரும்பும்போது இழந்த சம்பளம் திரும்பிக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம்

தகவல்வழங்கியவர்களில் (53%) பெரும்பான்மையானோர் (N=101) கடந்த சில மாதங்களில் தாம் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவைக்குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை 31 வீதமானோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவில் மாற்றமெதனையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர் (உரு 5). 16 வீதமானோர் மட்டுமே  தாம் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவை அதிகரித்துள்ளதாகக் கூறும் அனைவரும்   உயர்நுட்பத்தேர்ச்சியுடைய  தொழிலாளர்களாவர்.  அதேநேரம் நுட்பத்தேர்ச்சியுடைய மற்றும் அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவை ஒன்றில்  குறைத்துள்ளனர் அல்லது இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவில் மாற்றமெதனையும் செய்யவில்லை.

இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவைக்குறைத்தவர்கள் (N=54) அவ்வாறு குறைத்தமைக்கான பிரதான காரணம் சம்பள வெட்டாகும் (55.6%).  அதற்கு அடுத்த காரணங்கள் யாதெனில்  கொள்ளை நோயினால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த பொருளாதார நிச்சியமற்றதன்மையாகும்(38.9%), சாத்தியமான சம்பள குறைப்புக்கள் (33.3%), வரப்போகும் மாதங்களில் இடம்பெறப்போகும் பணிநீக்கம் (24.1%) என்பனவாகும். பணப்பரிமாற்ற அலுவலகங்களின் தற்காலிக (14.8%) மற்றும் பணிநீக்கம் (9.3%) என்பனவே இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவைக்குறைத்தமைக்கான ஏனைய காரணங்களாகும்.

மறுபக்கத்தில், இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவை அதிகரித்தவர்கள் (N=16) அதிகரித்தமைக்காகக் கூறும்  காரணங்கள் யாதெனில்  இலங்கையிலுள்ள நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொள்ளை நோயின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிரமங்களுக்கு முகம்கொடுப்பதற்கு உதவுவதற்காகவும் (87.5%), வரப்போகும் மாதங்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான பணிநீக்கத்தினை எதிர்கொள்வதற்காக சேமிப்பினை அதிகரிப்பதற்குமாகும் (25%). நாட்டின் வீழ்ச்சியடைந்து செல்லும் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளைச் சீர்செய்வதற்காக வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் முகமாக  வெளிநாட்டு நாணயத்தினை இலங்கையில் வைப்பிலிடவேண்டும் எனும் கோரிக்கை (12.5%), இலங்கையில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டவுடன்  இலங்கையிலுள்ள வங்கிகளால் வழங்கப்ட்ட உயர்வட்டி வீதங்கள் (6.3%) மற்றும் வீட்டிலிருந்து தொழில் புரிதல் மற்றும் சமூக வாழ்வுக்  கட்டுப்பாடுகளினால் கட்டாரில்  செலவில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவே  இலங்கைக்கு பணம் அனுப்புதலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான ஏனைய காரணங்களாகும்.

கட்டாரிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் எதிர்கால திட்டமிடல்கள்

தகவல் வழங்கியவர்களில் 28 வீதமானோர் (N=101) அண்மைய எதிர்காலத்தில் நிரந்தரமாக இலங்கைக்குத் திரும்பி வருவதற்குத் திட்டமிடும் அதேவேளை 51 வீதமானவர்கள் இன்னும் எவ்வித தீர்மானத்தினையும் எடுக்கவில்லை.  வரப்போகும் மாதங்களில் 22வீதமானவர்களே தாம் நிரந்தரமாக இலங்கைக்குத் திரும்பி வரப்போவதில்லை என்பதில் திடமாக உள்ளனர்.

இலங்கைக்குத் திரும்பி வருவதற்கு திடமாக உள்ளவர்களில் (N=28), 29 வீதமானவர்கள் மட்டும் தமது திரும்புகை கோவிட் 19 உடன் தொடர்புபட்டதல்ல எனக் கூறியுள்ளனர். 58 வீதமானவர்கள் இலங்கைக்குத் திரும்பவேண்டும் எனத் திட்டமிட்டிருந்து போதும் கொள்ளை நோயின் காரணமாக இலங்கைக்குத் திரும்பும் தமது திட்டத்தினை துரிதப்படுத்தியுள்ளனர்.  தாம் கட்டாரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவிடுவோம் என்னும் அச்சத்தில் 7 வீதமானவர்கள் இலங்கைக்குத் திரும்பப்போகின்றனர். அதேவேளை 3.5 வீதமானவர்கள் தொழிலை இழந்து விட்மையினால் இலங்கைக்குத் திரும்பப்போகின்றனர். பணிநீக்கம் அல்லது தொழில் ஒப்பந்தம் நீடிக்கப்படாதவர்களில் (N=9) மூன்றிலொருபகுதியின் இலங்கைக்குத் திரும்பி வருவதற்குத் திட்டமிடும் அதேவேளை கிட்டத்தட்ட 44 வீதமானோர் கட்டாரில் தொடர்ந்தும் தங்கியிருந்து வேறோரு தொழிலைலைத்தேடுவதற்குத் திட்டமிடுகின்றனர்.

முடிவுரை

கட்டாரில் பரவிய கோவிட்19 மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக கட்டாரிலுள்ள குறிப்பிடத்தக்களவு இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு நிதியியல் சார் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பல்வேறு நிதிப்பிரச்சினைகளில் சம்பளக் குறைப்பே அனைத்து வகையான நுட்பத்தேர்ச்சியிடையேயும் பொதுவான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 50 வீதமான தகவலாளர்கள் தங்களது சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி 10 வீதததிற்கும் குறைவான தகவலாளர்கள் தொழில் இழப்பினைச் சந்தித்துள்ளபோதும், இப்புள்ளிவிபரம் வரப்போகும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் 42 வீதமான தகவலாளர்கள் வரும் நாட்களில் தாம் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என நம்புகின்றனர்.  அனைத்து வகையான நுட்பத்தேர்ச்சியுடைய தொழிலாளர்களை நோக்கும் போது அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் குறிப்பிடத்தக்க வீதமான அரைநுட்பத்தேர்ச்சி தொழிலாளர்கள் ஏற்கனவே கடன்களை திருப்பிச் செலுத்துவதிலும், உணவு மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

சம்பள குறைப்புக்கள், பணி நீக்கம், கொள்ளை நோயினால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த பொருளாதார நிச்சயமற்றதன்மைகள்  மற்றும் தனிநபர் ஊடான பணப்பரிமாற்றல் சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டமை  போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு  குறைவடைந்துள்ளது. தனிநபர் ஊடான பணப்பரிமாற்றல் சேவைகள் தற்போது கட்டாரலி பொதுமக்களின் தேவைகளுக்காக திறக்கப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் சம்பளக் குறைப்புக்களை எதிர்கொண்டால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சிநிலைமை  தொடரக்கூடும். அத்துடன் தகவல் வழங்கியவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் பெரும்பாலும் கொள்ளைநோயுடன் தொடர்புபட்ட காரணத்தினால் கட்டாரை விட்டு வெளியேறுவதற்கான தமது திட்டத்தினை துரிதப்படுத்துகின்றனர். அத்துடன் கட்டாரிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சிநிலைமை இன்னும் மோசமடையக்கூடும். இது இலங்கையிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் தங்கியிருப்போரையும்  வெளிநாட்டுப் பணஅனுப்பலில் அதிகம் தங்கியிருக்கும் இலங்கைப்பொரளாதாரத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கப்போகின்றது.

குறிப்புக்கள்

  1. இவ்வாக்கமானது ஆசிரியர்களின் ஆய்வுக்கட்டுரையின் முதல் வரைவினை அடிப்படையானதாகக் கொண்டதாகும். சர்வாம்சரீதியான பகுப்பாய்வானது மிகவிரைவில் கிடைக்கும்.
  2. புலம்பெயர்ந்தோரின் நுட்பத்தேர்ச்சி மட்டமானது சர்வதேச தொழிலாளர் நிறுவகத்தின் (International Labour Organisation -ILO) தொழில்கள் பற்றிய சர்வதேச நியம வகைப்படுத்தலினை (International Standard Classification of Occupations -ISCO) அடிப்படையாகக் கொண்டது.